31st Sunday in Ordinary Time

பொதுக்காலம் முப்பத்தோராம் ஞாயிறு

2022.10.30

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இரக்கமும் கனிவும் உடையவராய். எல்லாருக்கும் நன்மை செய்பவராய்,  தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவராய் இருக்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திரு வழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம்  முப்பத்தோராம்  ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே கடவுள் அவற்றைப் பார்த்தும் பாராமல் இருக்கின்றார். படைப்புகள் அனைத்தின்மீதும் அவர் அன்புகூர்கின்றார். கடவுள் தாம் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்  என்னும் இறைவனின் அளவிடமுடியாத அன்பினதும் கரிசனையினதும் உண்மை மீளவும் நமக்கு உறுதிப்படுத்தப்படுகின்றது. இது இறைவனை மட்டுமே நம்புகின்ற, அவரை முழு மனத்தோடு அன்பு செய்கின்ற,  அவர் காட்டும் வழிகளில் நடக்கின்ற வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது.

 

எனவே இன்றைய நாளில் முழு மனத்தோடு இறைவனை நம்பி,  அவர் காட்டும் பாதையில் நமது ஆன்மிக நிறைவை நோக்கிப் பயணிக்க அருள் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்.

 

சாலமோனின் ஞான நூலிருந்து வாசகம் 11:22-12:2

 

ஆண்டவரே, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும் நிலத்தின்மீது விழும் காலைப் பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது. நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்; மனிதர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்தும் பாராமல் இருக்கின்றீர். படைப்புகள் அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!

 

உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது,  உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? ஆண்டவரே,  உயிர்கள்மீது அன்பு கூர்கின்றவரே,  நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன.

 

உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிதுசிறிதாய்த் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 145:1-2, 8-14

 

பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.

 

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
பல்லவி

 

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;  எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.
பல்லவி

 

ஆண்டவரே,  நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.
பல்லவி

 

ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!

 

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம்  திருமுகத்திலிருந்து வாசகம்  1:11-2:2

 

சகோதரர் சகோதரிகளே,

 

நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!

 

சகோதரர் சகோதரிகளே,  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருiகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி     யோவா  3:16

 

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19:1-10

 

அக்காலத்தில்

 

இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில்,  சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியே தான் வரவிருந்தார்.

 

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. தடுக்கி விழும் யாவரையும் தாங்குகின்ற தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரினதும் ஆன்மிக வாழ்வில், அருள் வாழ்வில் தடைகளும், சறுக்கல்களும் ஏற்பட்டு அவர்கள் தடுமாறுகின்றபோது, உமது இரக்கத்தால் அவர்களைத் தாங்கி, அவர்களின் பலவீனங்களிலிருந்து அவர்களைத் தூக்கி நிறுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. இழந்து போனதைத் தேடி மீட்க வந்த தந்தையே இறைவா! எம் ஆன்மிக அருள் வாழ்விலும்,  குடு ம்ப வாழ்விலும், பணி வாழ்விலும், பொது வாழ்விலும் தடைகளும்,  சறுக்கல்களும் ஏற்பட்டு நாங்கள் தடுமாறுகின்றபோது,  உமது இரக்கத்தால் எங்களைத் தாங்கி,  எங்களின் பலவீனங்களிலிருந்து எம்மைத் தூக்கி நிறுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. உம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அன்பு கூர்ந்த தந்தையே! நாங்கள் ஒவ்வொருவரும் மனமாற்றம் பெற்று,  நீர் எமக்குக்காட்டும் அன்பையும், பரிவையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கின்ற தந்தையே இறைவா! பாவப் பழக்க வழக்கங்கள்,  போதைப் பொருள் பாவனை,  குடிவெறி,  சூது போன்ற நச்சு வலைக்குள் அகப்பட்டு வெளிவரமுடியாமல் வாழ்வையை அழித்துக்கொள்ளும் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று: ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! என்னும் ஆசீரால் அவர்களையும் நிரப்பி,  இத் தீய வாழ்க்கையிலிருந்து அவர்களை மீட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.