Feast of Christ the King

கிறிஸ்து அரசர் பெருவிழா

2022.11.20

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

ஓர் அரசருக்கு, அல்லது தலைவருக்குக் கொடுக்கப்படும் பொறுப்பு, அது  அதிகாரமல்ல. அது நன்மைகள் செய்வதற்கான ஓர் அழைப்பு, மக்களை வழி நடாத்துவதற்கான அர்ப்பணம், தன்னையே அடுத்தவருக்காக கொடுக்கும் ஒரு தியாக வாழ்வு. இது இயேசுவிடமிருந்து நாம் பெற்றுக் கொண்டதும், கற்றுக் கொண்டதுமான ஒரு மாபெரும் உண்மை. தியாகம், அன்பு, மன்னிப்பு, தாழ்மை, பிறர் நலம், பணிவிடை பெறாது தனது மக்களுக்குப் பணிசெய்தல் என்பனவே கிறிஸ்து அரசரின் இயக்கமாகவும், இலட்சியமாகவும் இருந்தது. இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டி, விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் கடவுளோடு ஒப்புரவாக்கினார்.

 

அவருடைய மக்களாகிய நாமும் அனைவரோடும் புனிதமான உறவை வளர்த்துக் கொள்ள, தியாகம், அன்பு, மன்னிப்பு, தாழ்மை, பிறர் நலம் போன்ற பண்புகளை நம்மில் வளர்த்து இறைமக்களாய் வாழ அருள் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

 

சாமுவேல் இரண்டாம் நூலிருந்து வாசகம் 5:1-3

 

அந்நாள்களில்

 

இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்கு தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.”

 

இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்  திபா 122: 1-2, 4-5

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

 

“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.

பல்லவி

 

ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.

பல்லவி

இரண்டாம் வாசகம்

தந்தையாம் கடவுள் நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.

 

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:12-20

 

சகோதரர் சகோதரிகளே,

 

தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.

 

அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன.

 

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  மாற்11:10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23:35-43

 

அக்காலத்தில்

 

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்” என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று எள்ளி நகையாடினர். “இவன் யூதரின் அரசன்”என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

 

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்துரைத்தான்.

 

ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.

 

பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்” என்றான்.

 

அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. இருளின் அதிகாரத்திலிருந்து அனைவரையும் விடுவிக்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், சவால்கள் நிறைந்த இவ்வுலகின் தலைமைத்துவத்தைப் பின்பற்றாது, நீர் காட்டிய உண்மையான வழிகளைப் பின்பற்றியவர்களாய் மக்களை வழி நடாத்தவும், இருள் நிறைந்த தீமைகளிலிருந்து அவர்களை விடுவித்து, அருளின் பாதையில் அவர்களை வழிநடாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும் தந்தையே இறைவா!  நாங்கள், தேவையில் இருப்போரில் இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டு, அவர்களின் தேவையை நிறைவு செய்வதன் வழியாக உமக்கு மகிமையையும், மாட்சியையும் கொண்டுவர வேண்டிய அருளை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3.  படைத்தவை அனைத்தின் மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா! இவ்வுலகில் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுள்ள அனைவரும், தியாகம், அன்பு, மன்னிப்பு, தாழ்மை, பிறர் நலம்,  பணிசெய்தல் என்பனவற்றைத் தங்களது இயக்கமாகவும், இலட்சியமாகவும் ஏற்று வாழ்ந்திட அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. மீட்பளிக்கும் தந்தையே இறைவா! சிறைகளுக்குள்ளும், தடும்பு முகாம்களுக்குள்ளும் அடைபட்டு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் விடுதலைபெற்று அமைதியோடும், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.