திருவருகைக்காலம் 4ம் ஞாயிறு

திருவருகைக்காலம் 4ஆம்  ஞாயிறு(22 டிசம்பர் 2024)

திருப்பலி முன்னுரை

திருவருகைக் காலத்தின் நான்காம் வாரத்தினுள் நுழைகின்றோம். அன்னை மரியின் வழியில் இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதன் வழியாக இறைஇயேசுவை சந்திப்போம்.

இஸ்ராயேல் மக்களை ஆளும் அரசராக இயேசுக்கிறிஸ்து பெத்லேகேமில் பிறக்கவிருப்பதை இறைவாக்கினர் மீக்கா வழியாக கடவுள் அறிவிப்பதை முதல் இறைவாக்கிலும், புனித பவுல் அன்பிற்காக பலியான கிறிஸ்துவின் இறப்பினை நினைவுபடுத்துவதை இரண்டாம் இறைவாக்கிலும், இயேசுக்கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே புனித எலிசபேத் மரியன்னையின் திருவயிற்றில் இருக்கும் குழந்தை யார் என்பதை முன்னறிவித்ததோடு, அன்னை மரியாவை “ஆண்டவரின் தாய்” என்று உலகிற்கு எடுத்துரைத்ததை நற்செய்தியிலும் வாசிக்க கேட்போம்.

அன்னை மரியாள் பகிர்ந்துகொண்ட மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்து கொள்வோம். அவளைப் பின்பற்றி இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து வாழ உறுதியான நல்மனத்தை எமக்கருள வேண்டி இப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a

ஆண்டவர் கூறுவது இதுவே:

நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.

ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 80: 1ac-2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

1ab இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! – பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! – பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு  அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். – பல்லவி

இரண்டாம் வாசகம்

உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 5-10

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது”என்கிறார்.

திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல” என்று அவர் முதலில் கூறுகிறார். பின்னர், “உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 38

அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில்

மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. வார்த்தை மனுவுருவாகி எம்மிலே குடிகொள்ள சித்தம் கொண்ட இறைவா! உமது வார்த்தையையும், வாழ்வையும் உடைத்துக்கொடுக்கும் அனைத்து நற்செய்திப் பணியாளர்களையும் ஆசீர்வதித்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. கிறிஸ்தவர்களாகிய எமது வாழ்வு இறைவன் குடிகொள்ளும் உன்னத இல்லங்கள் என்பதை மனதில் இருத்தியவர்களாக அதற்கேற்ற அன்பிய வாழ்வு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்னை மரியாளை பின்பற்றி தேவையிலிருப்போருடன் எமது நேரத்தையும், ஆதரவையும், அன்பையும் பகிர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. உம் திருவுளம் எம் வாழ்விலே வரும்பொழுதெல்லாம் அதை கண்டுணர்ந்து, எமது ஒத்துழைப்பை வழங்கி, எம் மூலமாக அவை நிறைவேற வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.