பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!
பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான் உலகம் சிறிது சிறிதாக நரகமாக மாறி வருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ் பெற்ற வரிகளை இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியத்தைத் தாண்டி, கிறிஸ்தவ மறையைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது.
இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித் தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன? அதற்கான பதிலை இன்றைய திருப்பலியில் தேடுவோம்.
முதல் வாசகம்
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்.
பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45:1,4-6
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார். பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார். கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார். அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார். அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:
என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன். நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர். வேறு எவருமில்லை. என்னையன்றி வேறு கடவுள் இல்லை. நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன். நானே ஆண்டவர். வேறு எவரும் இல்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 96: 1, 3-5, 7-10
பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள். அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
பல்லவி
ஆண்டவர் மாட்சிமிக்கவர். பெரிதும் போற்றத் தக்கவர். தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே. ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.
பல்லவி
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.
பல்லவி
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள். உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள். ஆண்டவரே ஆட்சி செய்கின்றார். அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், உங்கள் மனவுறுதியையும்; நினைவுகூருகிறோம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-5
தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி பிலி 2:15-16
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21
அக்காலத்தில்
பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர். எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர். ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள்.
இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள்.
அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள எம் இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளைத் தங்கள் பணிவாழ்வில் உள்ளடக்கி இறையன்பிலும், பிறரன்பிலும் சிறந்து விளங்கிட தூய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்திடவும், இயேசுவின் உடனிருப்பை மனதில் கொண்டு இறைபணிகளைச் செய்திட உமதருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- எங்கள் வாழ்நாளை எல்லாம் நலன்களால் நிறைவு செய்கின்ற எம் இறைவா! எம்குடும்பங்களில் இறையன்பும், பிறரன்பும் நிறைந்திடவும், அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுப்பதால் இல்லங்களிலும், மனங்களிலும் அன்பும் அமைதியையும் நிறைவாய் பெற்றிடவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
- எங்கள் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே! எம் இறைவா! எம்மை ஆளும் தலைவர்கள் செலுத்தும் அன்பானது நீதி கலந்த அன்பாக, நீதியை நிலைநாட்டும் அன்பாக அமைந்திடவும், சமயம், சாதி, இனம் கடந்து அனைவருக்கும் அரசின் நீதியும், உதவியும் கிடைத்திடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா! அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.