பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு(09 பிப்ரவரி 2025)
திருப்பலி முன்னுரை
பொதுக்காலத்தின் 5ஆம் வாரமாகிய இன்று எமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு, இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், இறைவனின் அழைப்பை ஏற்று வாழவும் திருச்சபை எம்மை அழைக்கின்றது.
முதல் இறைவாக்கில் “தூய்மையற்ற உதடுகளைக்கொண்ட மனிதன் நான்”என அறிக்கையிடும் இறைவாக்கினர் எசாயா, இரண்டாம் இறைவாக்கில் “திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்” என்று தன்னை தாழ்த்திக்கொண்ட புனித பவுல், நற்செய்தியில் “ஆண்டவரே நான் பாவி” என அறிக்கையிட்ட பேதுரு ஆகிய மூவரும் இறையொளியால் தம் பலவீனத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டவர்கள். இவர்களை கடவுள் தம் இறையாட்சிப்பணிக்கு அழைத்ததை இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.
இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக அவரது அழைப்பை ஏற்று, அவருக்கு நம்மை அர்ப்பணித்து வாழ அவரது உடனிருப்பை வேண்டி தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இதோ அடியேன் என்னை அனுப்பும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8
உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.
அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது’ என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.
அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன். அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது” என்றார். மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 138: 1-2a. 2bc-3. 4-5. 7c-8 (பல்லவி: 1b)
பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.2aஉம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். – பல்லவி
2bcஉம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். – பல்லவி
4ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.5ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! – பல்லவி
7cஉமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். – பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம்; நீங்களும் நம்புகிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 3-8, 11
சகோதரர் சகோதரிகளே,
நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 4: 19
அல்லேலூயா, அல்லேலூயா! “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அனைத்தையும் விட்டுவிட்டு, சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- காக்கும் தெய்வமே இறைவா! உம்மால் அமைக்கப்பட்ட திருஅவையின் திருப்பணியாளர்கள் உம் பணிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து வாழ நீர்தாமே அவர்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- கருணை மிக்கவரே! குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார தேவைகள், ஆன்மீகத்தேவைகளை நிறைவேற்றி காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
- மகிமை நிறைந்தவரே! எம் பிள்ளைகள் மத்தியில் இறையழைத்தலின் முக்கியத்தை விதைத்திடவும், நன்மை தீமையை பகுத்தறிந்திடவும் அவர்களுக்கு தூய ஆவியாரின் வரங்களை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- விடுதலையின் ஆண்டவரே! பலவிதமான உடல், உள, நோய்களால் வருந்தும் அனைவரையும் கனிவுடன் கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், மன அமைதியும், புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.