பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு (2 மார்ச் 2025)

திருப்பலி முன்னுரை 

பொதுக்காலத்தின் 8ஆம் வாரமாகிய இன்று நாம் பேசும் வார்த்தைகளைக் குறித்து நாம் கவனமாய் இருக்க வேண்டும் என திருச்சபை எமக்கு இன்றைய வாசகங்கள் வழியாக அறிவுறுத்துகின்றது.

முதல் வாசகத்தில் சொல் மனிதரின் உள்ளப்பண்பாட்டை காட்டுகின்றது என கூறுகின்றது சீராக்கின் ஞானநூல். இரண்டாம் வாசகத்தில் சாவு என்பது கிறிஸ்துவோடு இணைந்து நாம் வாழ்வதற்கான வழியாகையால் இயேசுவில் இறுதிவரை நிலைத்துநில்லுங்கள் என்று பவுல் கொரிந்தியருக்கு கூறுகின்றார். லூக்கா நற்செய்தியில் இயேசு சீர்திருத்தம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் தங்களைப்பற்றியே முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்னும் கருத்தோடு போதிக்கின்றார்.

உறவினர்கள், நண்பர்களுக்கிடையில் நம் வார்த்தையால் உண்மை ஊமையாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், நம் பேச்சினால் உறவுகளை மனம் வருத்திய சந்தர்ப்பங்களை நினைத்து இறைவனிடம் பாவமன்னிப்பை வேண்டுவோம். பிறப்பினாலும், விபத்தினாலும் கேட்கமுடியாத, பேசமுடியாத காரணத்தினால் தம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக விசேடமாக இன்றைய திருப்பலியில் வேண்டுவோம்.

முதல் வாசகம்

பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே; பேச்சைக்கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

 இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.

1ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. 2காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. – பல்லவி

12நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.13ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். – பல்லவி

14அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;.15‘ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவின் வழியாக வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 54-58

சகோதரர் சகோதரிகளே,

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?” பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

எனவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

 இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 2: 15-16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-45

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவர் அல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”

 இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. அன்பான இறைவா! திருப்பணியாளர்கள் கற்பு, ஏழ்மை, தாழ்ச்சி என்று குருத்துவ வாக்குறுதியில் நிலைத்திருந்து, இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து இறைபணியாற்றிட வேண்டிய உடல், உள, ஆன்மீக ஆரோக்கியத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
  2. அன்பான இறைவா! புகழுக்காகவும், பிறர் எம்மை மதிக்கவேண்டும் என்பதற்காகவும் போலி வாழ்க்கை வாழ்ந்தமைக்காக மன்னிப்பு கேட்கின்றோம். எம் பலம், பலவீனம் என்பவற்றை அறிந்து உண்மைக்கிறிஸ்தவர்களாக வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
  3. அன்பான இறைவா! பேச்சு என்பது கடவுள் கொடுத்த மிக உன்னதமான கொடை என்பதை உணர்ந்தவர்களாக அதைச் சரியாக நாம் பயன்படுத்தி கடவுளின் அறிவிப்பாளர்களாக மாற அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. அன்பான இறைவா! உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, எல்லாம் வல்ல இறைவன் நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், அவர் உடல் நலம் பெற்று திருஅவை மற்றும் முழு உலகத்திற்குமான பணிக்கு அவர் மீண்டும் திரும்பி வரவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.