Good Friday 2022

ஆண்டவரின் திருப்பாடுகள் ( புனித வெள்ளி)

2022.04.15

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவராம் நம் தந்தையாம் இறைவனை வணங்குவோம். இன்று புனித வெள்ளி. இறையன்பின் ஊற்று மானுடத்தை வந்தடைந்த நாள். இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதை நிரூபித்துக் காட்டிய நாள். அநியாயத் தண்டனை மரணம் சரிவு அல்ல அது சாதனைக் களம் என்பதை உணர்த்திய நாள். எனக்காக அழ வேண்டாம் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள் என்னும் தன்னுணர்வுத் தேடலை ஆரம்பிக்கச் சொன்ன நாள். இறையன்பிலிருந்து என்னைப் பிரிக்கக் கூடியது எது? என்னும் இலட்சிய வேட்கையின் வீரத்தை வெளிப்படுத்திய நாள். அன்னை மரியாவை சீடத்துவத்தின், பரிசாக, பாதுகாவலியாகக் கொடுத்த நாள். உலகத்தின் சிந்தனைக் கருவூலங்களைச் சிதறடித்து அவமானத்தின் சின்னமாம் சிலுவையை, மீட்பின் வழித்தடமாக மாற்றிய சரித்திர நாள். பாவக் கறையைக் கழுவித்துடைத்த தூய நாள். வெறுமையே அருள் நிறைவுக்கான திறவுகோல் என்பதை அர்த்தப்படுத்திய நாள். மன்னிப்பே மானுடத்தின் சுவாசம் என்பதை சுட்டிப்பாகச் சொன்ன நாள். எல்லாவற்றையும் கடந்து நேசத்தின் வாசம் நம்மைத் தழுவிய நாள்.

 

எனவே, சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடக்காமல், நம் ஆண்டவர் யேசுவின் பாடுகளை நினைவூட்டும் இந்தத் புனித வெள்ளிக்கிழமையின் ஆன்மிகக் கருவூலங்களை நன்கு உள்வாங்கியவர்களாக, தூய்மையான அன்பை வாழ்ந்து – பகிர்ந்து – பரிசளிக்கும் சீடர்களாக மாறுவோம்.வழிபாட்டில் இணைவோம்.

 

முதல் வாசகம்

 

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.

 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்  52:13 -53: 12

 

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்;  அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர். நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

 

இளந்தளிர்போலும் வறண்ட நில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்;  காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்;  நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;  நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

 

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்;  நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;  ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட் டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

 

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

 

அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

 

ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்   திபா 31: 1,5,11-12,14-16,24

 

பல்லவி:  தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.”

 

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும். உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.
பல்லவி

 

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்;  என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.
பல்லவி

 

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன். என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
பல்லவி

 

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்;  உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்;  தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14- 16.5: 7-9

 

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக

 

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.