கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா
2022.06.19
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! கனிவான செயல்களாலும், தமது பேரன்பாலும் நம்மைக் காத்துவரும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.
நம்முடைய ஆன்மீக, சமூக வாழ்வு சீராக அமைய இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளார். நாம் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் அதனை நிறைவாகப் பெறும் பொருட்டு தன் உடல், இரத்தம் அகியவற்றை வழங்கியுள்ளார். இயேசுவின் இந்தத் தியாக வாழ்வு வெறுமனே உடலையும், இரத்தத்தையும் கொடுத்தலோடு முடிந்துவிடவில்லை. மாறாகத் தமது அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, ஆசீர்வாதத்தை தொடர்ந்து நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தொடர் செயற்பாடாக இருந்து கொண்டேயிருக்கின்றது. அதனுடைய பிரதிபலிப்பே நாளாந்தம் நாம் திருப்பலியில் உட்கொள்ளுகின்ற இயேசுவின் திருவுடலாக மாற்றம் பெறும் நற்கருணையாகும்.
எனவே நாம் இந்த நற்கருணையைத் தகுதியுடன் உட்கொண்டு, கிறீஸ்துவின் திருவுடலாகிய நற்கருணை குறித்துக்காட்டும் அன்பு, ஒற்றுமை, அன்பிய சமூக வாழ்வு ஆகியவற்றை நாம் அர்த்தமுள்ள விதத்திலே வாழ வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 14:18-20
அந்நாள்களில்
சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!” என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 110: 1-4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார்.
பல்லவி
வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
பல்லவி
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
பல்லவி
‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
நீங்கள் உண்டு பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.
ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவான் 6:51-52
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
அனைவரும் வயிறார உண்டனர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:11-17
அக்காலத்தில்
இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே: சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார், அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.
ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ‘இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.
அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, கிறீஸ்துவின் திருவுடலாகிய நற்கருணை குறித்துக்காட்டும் அன்பு, ஒற்றுமை, அன்பிய சமூக வாழ்வு ஆகியவற்றை அர்த்தமுள்ள விதத்திலே வாழுவதற்கு வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அருள் வாழ்வின் ஊற்றான தந்தையே! நாங்கள் உமது வாக்கையும்; நியமங்களையும் நீதி நெறிகளையும் நேரிய முறையில் நாம் கடைப்பிடித்து, அன்பிய சமூக வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புத் தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகிய நாமனைவரும் உமது திருமகனாம் இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும் மதிப்பையும் உணர்ந்து வாழவும் இறைவார்த்தையாலும் நற்கருணையாலும் ஊட்டம் பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புத் தந்தையே இறைவா! எமது இளைஞர்கள் அனைவரும் நற்கருணை குறித்துக் காட்டும் தூய்மையான வாழ்வை வாழ்ந்து தாம் வாழுகின்ற சுழலில் என்றும் ஒளியாகத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.