Solemnity of the Nativity of Our Lord

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

2022.12.25

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! ஆறுதலும்,  மீட்பும் தரும் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் அனைவருக்கும் நல் வாழ்த்துகள் கூறுகின்றோம். இன்று நாம் பெருமகிழ்ச்சியோடும், பேருவகையோடும், நம்பிக்கையோடும் நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட ஒன்று கூடியுள்ளோம்.

 

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும் என்னும்  இறைவார்த்தைகள் பலவிதமான, இயற்கை, செயற்கை அழிவுகளாலும்,வன்முறைகளினாலும், மொழி, இன, சமயப் போட்டிகளாலும், அரசியல் ஆதிக்கத்தாலும், வறுமையாலும் சிதைவடையும் மனித உள்ளங்களுக்கு புதியதொரு நம்பிக்கையைக் கொடுக்கும் மகிழ்வின் நற்செய்தியாகின்றது.

 

மீட்பர் இயேசுவின் பிறப்பு விழாவின் மகிழ்வும் அமைதியும் நம்மை ஆட்கொள்ள,  நம் குடும்ப குழும உறவுகள் ஆழம் பெற, நமக்காக மனுவுரு கொண்ட மாபரன் இயேசுவின் அருள் வேண்டுவோம். கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவும், ஆண்டவருக்குள் மகிழ்ந்திருந்து, அவரை எப்பொழுதும் புகழ்ந்தேத்தவும்,  நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக வாழவும் – பணிபுரியவும் இத்திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

 

முதல் வாசகம்

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்

 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்    52:7-10

 

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே,  ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;  ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.


ஆண்டவரின்  அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்   திபா 98: 1-6

பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

 


ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.
பல்லவி

 

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார்.
பல்லவி

 

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி

 

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

 

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,  இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர்,  தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின்,  விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

 

இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்” என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பிய போது, “கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக” என்றார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக்  2:13-14

 

அல்லேலூயா,  அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

 

இடையர்கள் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20

 

வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்  கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

 

அதைக் கேட்ட யாவரும்,  இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

 

ஆண்டவரின்  அருள்வாக்கு

 

மன்றாட்டுக்கள்

1. வியத்தகு ஆலோசகரும் வலிமைமிகு இறைவனுமாகிய தந்தையே! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும் நீரே வலிமையாகவும்,  ஆலேசனையாளராகவும் இருந்தருளும். ஆன்மிகத்திற்கும்,  அருள்வாழ்வுக்கும், எதிராக எழும் எல்லாத் தீமைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய ஞானத்தையும், வலிமையையும்  அளித்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. காரிருளில் இருப்போருக்கு பேரொளியைக் காட்டும் தந்தையே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும், இம்மையில், அமைதியின் தூதர்களாக வாழவும், செயற்படவும் தேவையான அருளாசீரை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறியும் தந்தையே! உலக நாடுகள்  அனைத்திலும் உண்மைக்காகவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும்,  உரிமை வாழ்வுக்காகவும்,  அன்புக்காகவும் தாகித்து நிற்கும் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து,  அவர்களின் குறைகளைப் போக்கி நிறைவு செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. அரும்பெரும் செயல்கள் புரியும் வல்லவராம் தந்தையே இறைவா! நீர் எமக்கு கொடுத்துள்ள எல்லா வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். எமது அன்றாட வாழ்வில் தேவையற்ற, ஆடம்பரங்களில் எமது உழைப்பையும் வளத்தையும் விரயமாக்காது பெறுப்புணர்வோடு அவைகளைப் பயன்படுத்துவதற்கும்,  ஏழைகளோடு அவற்றைப் பகிர்ந்து வாழ்வதற்கும் வேன்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

5. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய10ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே! இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், தனிமையிலும் வாடுவோர், குடும்ப பிரிவுத்துயருக்குள்ளா கியிருப்போர் அகதிமுகாம்களில் இருப்போர், அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.