ஆண்டவரின் விண்ணேற்றம்
29.05.2022
முன்னுரை
கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே எப்பெயருக்கும் மேலாக உயர்த்தப்பட்டு, தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கும் நம் ஆண்டவரின் திருப்பெயரால் வாழ்த்துகள் கூறி இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக திருத்தூதர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்; அத்தோடு அவர்களை எருசலேமை விட்டு நீங்க வேண்டாம் எனவும் தன்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள் என்றும் தம் திருத்தூதர்களிடம் கேட்டுக்கொள்கின்றார். உண்மையிலேயே இயேசுவின் பிரசன்னமும், வாக்குறுதிகளும் கவலையோடு இருந்த திருத்தூதர்களுக்கு மட்டுமல்ல இன்று பல்வேறு சவால்களுக்குள்ளும், நம்பிக்கையீனங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் நம்பிக்கையும் சக்தியையும் தருகின்றன.
ஆகவே நாம் அனைவரும் இயேசுவின் அருட்பிரசன்னத்திலும், அவருடைய உடனிருப்பிலும், அவருடைய வார்த்தையிலும், வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொண்டு வாழுவோம். அத்தோடு நம் வாழ்வாலும், பணியாலும் இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றுவோம். இறையாசீர் பெற்றுப் புதுவாழ்வு வாழத் தொடரும் பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
எங்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1:1-11
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.
அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று கூறினார்.
பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா: 47:1-2, 5-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே.
பல்லவி
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
பல்லவி
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்து விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9:24-28, 10:19-23
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும்பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின் மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 28:19, 20
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார்.
பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. அன்புத் தந்தையே இறைவா! சவால்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்கும், சீரிய வழிகாட்டுதல்களையும், ஞானத்தையும், அறிவுரைகளையும் நீரே வழங்கி, நற்செய்தியைத் தம் வாழ்வாலும், பணியாலும் அறிவிக்கும் ஆற்றலை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அனைத்துலகின் வேந்தரே இறைவா! உமது திருமகன் இயேசு வழியாக நீர் கட்டியெழுப்பிய திரு அவை உலகில் வாழும் அனைவருக்கும் ஆற்றலாகவும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து செயற்படவும், நற்செய்தியை வாழ்வாலும், பணியாலும் எடுத்துரைக்கவும் ஞானத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. உன்னதரான தந்தையே! உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புத் தந்தையே இறைவா! எம் இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும், இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கொடுத்தது போன்ற ஆற்றலையும், சக்தியையும் பெற்று தாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றவர்களாகவும், உமது நற்செய்தியின் தூதுவர்களாகவும் செயற்படும் சக்தியை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.