திருக்காட்சித் திருவிழா
2023. 01. 08
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் தந்தையாம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன்று நாம் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.
இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை வலியுறுத்தும் ஓர் உன்னத விழாவாக இவ்விழா அமைகின்றது. இறைவன் தன்னை குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரமல்ல, மாறாக அனைவருக்கும் தன்னை நிபந்தனையற்ற விதமாக வெளிப்படுத்திய நிகழ்வை நாம் இன்று விழாவாகக் கொண்டாடுகின்றோம். ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார், என்னும் இறைவார்த்தைகள் இறைவனின் அருளும், இரக்கமும் அனைவருக்கும் உரியது என்னும் உண்மையை உறுதி செய்கின்றன.
நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினருமாக இருக்கின்றோம். நம் அனைவருக்கும் இறைவனே தந்தை. ஆகவே ஆண்டவரின் திருக்காட்சி விழாவைக் கொண்டாடும் நாம் நமது உறவுகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வளர்த்துக்கொள்ளாது நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்னும் உணர்வோடு என்றும் வாழ இத்திருப்பலி வழியாக நம்மை அர்ப்பணிப்போம்.
முதல் வாசகம்
ஆண்டவரின் மாட்சி உன்மீது உதித்துள்ளது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60:1-6
எருசலேமே எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னி டம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 72:1-2, 7-8, 10-13
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் அவருக்கு உமக்கு செய்வார்கள்.
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக.
பல்லவி
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.
பல்லவி
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.
பல்லவி
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:2-3, 5-6
சகோதரர் சகோதரிகளே,
உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.
அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 2:2
அல்லேலூயா, அல்லேலூயா ! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அரசரை வணங்க வந்திருக்கிறோம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-12
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம” என்றார்கள்.
இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.
பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வண்ஙகுவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.
இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்கும் உமது நற்செய்தியை சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றலை அளியும். அவர்களிடம், உமது நீதியை விளங்கச் செய்து உம் மக்களை சிறப்பாக வழி நடாத்த வேண்டிய ஆற்றலை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வறியோர்க்கும் ஏழைகட்கும் இரக்கம் காட்டுகிறவரான இறைவா! ஆன்மிகத்தில், அன்பில், பொது நலனில் வறியவர்களாக இருக்கும் எங்கள் மீது மனமிரங்கி, நாங்கள் எங்களுடைய ஆன்மிக வாழ்வை செழுமையுள்ளதாக்கிட வேண்டிய ஞானத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. திக்கற்ற எளியோரை விடுவிப்பவரான தந்தையே இறைவா! சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும், அகதி முகாம்களிலுமிருந்து வேதனைப்படும் அனைவருக்கும் விடுதலையையும், சுதந்திர வாழ்வையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! உலக நாடுகள் அனைத்திலும் நீதி தழைத்தோங்கவும், மிகுந்த சமாதானம் நிலைபெறவும், வறுமை, வீண் பயம் என்பன ஒழிந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்திட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.