தவக்காலம் முதல் ஞாயிறு

தவக்காலம் முதல் ஞாயிறு (09 மார்ச் 2025)

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் முதல் வாரமாகிய இன்று இஸ்ராயேல் மக்களின் பாலைவனச்சோதனைகளையும், இயேசுவின் பாலைவனச்சோதனைகளையும் ஒப்பிட்டு, எம் வாழ்வில் நிகழும் பாலைவனச்சோதனைகளை எவ்வாறு வெற்றி கொள்ளவேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள இன்றைய உயிருள்ள இறைவார்த்தை எமக்கு துணை நிற்கின்றது.

முதல் வாசகத்தில் துன்பமிகுதியால் ஆண்டவரை நோக்கி கூக்குரல் எழுப்பிய இஸ்ராயேலரை ஆண்டவர் கண்ணோக்கினார் என மோசே அறிக்கையிடுகின்றார். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் தம் அனுபவத்தால் “இயேசுவே அனைவருக்கும் ஆண்டவர்” என  தம் வாயால் அறிக்கையிடுகின்றார். நற்செய்தியில் மனிதனாக பிறந்த இயேசு அலகையின் சோதனையை வெற்றிகொள்ள இறைவார்த்தை எனும் ஆயுதத்தை பயன்படுத்துகின்றார்.

மனிதனின் வாழ்க்கையில் சோதனைகள் இன்றியமையாதது. அதனை வெற்றிகொள்ள இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட உன்னத கொடை இறைவார்த்தையாதலால், திருவிவிலிய வாசிப்பை இத்தவக்காலத்தில் வழக்கப்படுத்திக்கொள்வோம்.  வாழ்வின் சோதனைகளை வெற்றிகொள்ள இறைவரம் வேண்டி தொடரும் கல்வாரிப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது:

நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.

எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற் பலனைக் கொண்டுவந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

 இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15 (பல்லவி: 15b)

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.

1உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.2ஆண்டவரை நோக்கி, ‘நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்’ என்று உரைப்பார். – பல்லவி

10தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது.11நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். – பல்லவி

12உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.13சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். – பல்லவி

14‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்;. 15அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்’. – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவில் விசுவசிக்கிறவனுக்குரிய விசுவாச அறிக்கை.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 8-13

சகோதரர் சகோதரிகளே,

மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.” இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், “அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” என்பது மறைநூல் கூற்று.

இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். “ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்” என்று எழுதியுள்ளது அல்லவா?

 இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

மத் 4: 4b

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி வாசகம்

பாலைநிலத்திற்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார்; சோதிக்கப்பட்டார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-13

அக்காலத்தில்

இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.

பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே” என்றார்.

அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

 இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்

  1. திருச்சபையின் திருப்பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறையரசுப் பணிகளை, வரும் தடைகளைத் தாண்டி சிறப்பாகச் செய்திட தூய ஆவியின் துணையால் அவர்களை காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உம்மிடம் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அனைத்துக்காகவும் உமக்கு நன்றி கூற மறந்தமைக்காக மனம் வருந்துகின்றோம். எம் உழைப்பின் முதற்கனியை இறைவனுக்கு காணிக்கையாக்கும் நல்லிதயத்தை எமக்கருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. கடவுளின் இயல்பை வெளிப்படுத்தும் இறைவார்த்தையை வாசித்தும், கேட்டும் வாழ்வாக்கிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இத்தவக்காலத்தில் செபம், உபவாசம், ஒப்புரவு, சிலுவைப்பாதை போன்ற ஆன்மீக செயற்பாடுகளில்  அதிகம் ஈடுபட்டு எம் ஆன்மிக வாழ்வை வளப்படுத்த அருள்தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.