தவக்காலம் 2ஆம் ஞாயிறு

தவக்காலம் 2ஆம் ஞாயிறு(16 மார்ச் 2025)

திருப்பலி முன்னுரை 

இன்று தவக்காலத்தின் 2ஆம் வாரமாகும். மாற்றங்களுக்கு அத்தியாவசியமானது ஆன்மிகத் தேடல்களும், மனமாற்றமும் ஆகும். இதன் விளைவாக நமது ஆன்மிக, சமூக, குடும்ப வாழ்வு முன்னேற்றம் காணவேண்டும் என்று திருஅவை எதிர்பார்க்கின்றது.

முதல் வாசகத்தில் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்துகொண்ட தந்தை இறைவன் அவரது வழிமரபினருக்கு வழங்கும் நாட்டைப்பற்றி கூறுவதையும், இரண்டாம் வாசகத்தில் கடவுள் தம் ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் வல்லமை மிக்கவர் என்று புனித பவுல் பிலிப்பியருக்கு எடுத்துக் கூறுவதையும், இயேசுவின் உருமாற்றம் பற்றி நற்செய்தியில் புனித லூக்கா விளக்கிக்கூறுவதையும் வாசிக்க கேட்போம்.

உண்மையான அர்ப்பணத்துடன் மனமாற்றமடைந்தால் இறை – மனித சந்திப்பு நடைபெறும். அத்தகைய உன்னத சந்திப்பு நாம் பங்கேற்கும் திருப்பலியில் நடைபெறுகின்றது என்பதை உணர்ந்தவர்களாக கிறிஸ்துவை சந்திக்க தொடரும் திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசகம்

கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?” என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

 இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 7-8. 9abc. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? – பல்லவி

7ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.8‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்; ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். – பல்லவி

9abcஉமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். – பல்லவி

13வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.14நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17- 4: 1

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர். ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.

 இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”

நற்செய்தி வாசகம்

அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.

அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

 இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்

  1. இறைமக்களுக்கு தாய்நாடான விண்ணகத்தை சென்றடையும் நல்வழிகளை கற்பிக்க திருஅவைத் திருப்பணியாளர்களுக்கு ஆபிரகாமைப்போல இறைநம்பிக்கையையும், துணிவையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பிடிவாதம், தன்னலம், குறைகாணும் மனநிலை உள்ளவர்களாக வாழ்ந்தமைக்காக மனம் வருந்தும் எம்மை மன்னித்து, உம் அன்புப்பிள்ளையாக ஏற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இத்தவக்காலத்தில் நாம் ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றிடவும், எம் பகைவரோடு ஒப்புரவாகிடவும் அருள்தரவேண்டுமென்று வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கடவுளின் உன்னத படைப்பாகிய என்னிடம் உள்ள திறமைகள், ஆற்றல்களை கண்டறிந்து அவற்றை எனக்குள் வளர்த்து, உம் திருச்சபைத்தோட்டத்தில் நற்பயனளிக்க அருள்தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.