பொதுக்காலம் 23ம் ஞாயிறு

பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு (08 செப்டம்பர் 2024 )

திருப்பலி முன்னுரை

பொதுக்காலத்தின் 23ம் வாரமாகிய இன்று அனைத்து மனிதர்களையும் முழுமையான மனிதர்களாக மதித்து வாழ தாய்த்திருச்சபை எமக்கு அழைப்பு விடுக்கின்றது.

முதல் இறைவாக்கில் இறைவாக்கினர் எசாயா அனைவரது வாழ்விலும் வல்ல செயல்களை ஆற்ற வல்ல கடவுளின் வருகையை முன்னறிவிப்பதையும், இரண்டாம் இறைவாக்கில் புனித யாக்கோபு கடவுளின் பார்வையில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடில்லை என்பதை எடுத்துக்கூறுவதையும், மாற்கு நற்செய்தியில் இயேசு காது கேளாத, வாய் பேசாத ஒருவனை வளக்கத்துக்கு மாறாக சில அடையாளங்களை செய்து குணப்படுத்துகின்ற அருளடையாளத்தை பற்றியும் வாசிக்க கேட்போம்.

இயேசு உடல், உள நோய்களுக்கு சிறந்த மருத்துவர். எமது சமூகவியல் வாழ்விற்கு தடையாக இருக்கும் உடல், உள நோய்களை குணப்படுத்தி எம் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்று தொடரும் கல்வாரிப்பலியில் பக்தியுடன் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

காது கேளாதோரின் செவிகள் கேட்கும். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7 a

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளா தோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். – பல்லவி

8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9aஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். – பல்லவி

9bcஅனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

ஏழைகளாய் இருப்பவர்களை, கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

அக்காலத்தில்

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘எப்பத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

  1. திருஅவையின் திருப்பணியாளர்கள் முழுத்திருச்சபையினையும் வழிநடத்தி, இறையாட்சிக்கு அழைத்துச்செல்ல வேண்டிய உடல், உள ஆரோக்கியத்தை அவர்களுக்களித்து, காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. மருத்துவத்துறையில் பணிபுரியும் அனைவரும் அர்ப்பணிப்போடும், பொதுநலத்தோடும் பணியாற்ற அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. மன அழுத்தத்தினால் துன்புறும் மாணவர்கள் இறைவார்த்தையை வாசித்தல் ஊடாக கடவுளின் உடனிருப்பை உணர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார தேவைகள், ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.