பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு
25.06.2023
முன்னுரை
கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
ஆண்டின் பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு திருவழிபாட்டு கொண்டாட்டத்திற்காக கூடி வந்துள்ளோம். வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கும் இறை பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு, தமது பேரன்பினால் நமக்கு பதில்மொழி தரும் இறைவனை இறுகப் பற்றிக்கொண்டு கிறிஸ்தவ வாழ்வில் முன்னேற நமக்கு அழைப்பு விடுக்கப் படுகிறது. அழிவின் சக்திகள் வாழ்வின் கலாசாரத்தை சிதைத்து வரும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பெற்றுக் கொண்ட நம்பிக்கை வாழ்வில் உறுதியாக நிலை நின்று கிறிஸ்துவுக்கு சான்று பகரவும் எல்லாச் சூழ்நிலையிலும் தெய்வ பயமுடையவர்களாக, கடவுளை நாடித் தேடும் மனம் கொண்டவர்களாக இருக்கவும், செயற்படவும் அருள் வேண்டி பலியில் இணைவோம்.
முதல் வாசகம்
கடவுள் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
இறைவாக்கினர் எரேமியா நூலிருந்து வாசகம் 20:10-13
எரேமியா கூறியது:
‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள் கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன் மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்’ என்கிறார்கள்.
ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.
படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 69: 7-9. 13,16. 32-34 (பல்லவி: 13b)
பல்லவி: கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின் மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்து விட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.
பல்லவி
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மைமிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.
பல்லவி
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
குற்றத ;தின் தன்மை வேறுää அருள்கொடையின் தன ;மை வேறு.
திருத்தூதர் பவுல ; உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:12-15
சகோதரர் சகோதரிகளேää
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
திருச்சட்டம் தரப்படும் முன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப் படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும், சாவு அவர்கள் மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 15: 26b-27a
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவா். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:26-33
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுகள்
1. ஞானத்தின் ஊற்றே இறைவா,
திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியாரின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்ற அவர்களை தூண்டுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமையின் தந்தையே இறைவா!
பல்வேறு பணிப்பெறுப்புக்களைப் பெற்றுள்ள நாம் அவற்றின் மேன்மையை உணர்ந்து, தாழ்ச்சியோடும், பொது நலத்தையும், இறை மகிமையையும் கருத்திற் கொண்டு தூய உள்ளத்தோடு பணியாற்றுவதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. உலகின் ஒளியான தந்தையே இறைவா!
எமது இளைஞர்களுக்கு நீரே அனைத்து வழிகளிலும் தெளிவையும், நல்ல பண்புகளையும் கொடுத்து, அவர்கள் என்றும் உமக்குரியவர்களாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிநடாத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!
பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.