பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு
18.06.2023
முன்னுரை
அன்பானவர்களே, பொதுக்காலத்தின் பதினொறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போட வரவேற்கிறோம். இயேசுவின் அழைப்பை ஏற்று இறையாட்சியைப் பறைசாற்ற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்க நாம் அழைக்கப்படுகிறாோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர இயேசு அழைப்பு விடுக்கிறார். நாம் ஆண்டவருக்காக பணியாற்றும் அமைதியின் தூதர்களாக இந்த உலகில் செயல்பட இறைவன் அழைக்கிறார். நம் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பைத உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 2-6
அந்நாள்களில்
இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலைநிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர். ஆனால் மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார்.
அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்ல வேண்டியது – இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது – இதுவே: “நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
பல்லவி
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
பல்லவி
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்து நமக்காக உயிரைக் கொடுத்ததால் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6-11
சகோதரர் சகோதரிகளே,
நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அதுமட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 36- 10: 8
அக்காலத்தில்
திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுகள்
1. வாழ்வளிக்கும் இறைவா! எமது திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறைபணியை குறைவின்றி நிறைவேற்ற வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நிறைவாழ்வான இறைவா! எங்கள் வாழ்க்கைப் பாதையில் நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இல்லாமல், எங்கள் வாழ்விலும் தாழ்விலும் உம்மையே உறுதியாகப் பற்றிக் கொண்டு நடக்க அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. மீட்பளிக்கும் இறைவா! பாவ வழிகளில் சிக்குண்டு அதனின்று வெளிவர வழி தெரியாமல் தவிக்கின்ற அனைவருக்காகவும் வேண்டுகிறோம். அவர்கள் தங்கள் தவறுகளிலேயே அமிழ்ந்து, அழிந்து போய்விடாமல் நீரே அவர்களை தடுத்தாட்கொண்டு பாதுகாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவாழ்வு அருள்பவராம் இறைவா, உலெகங்கும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும், உமது இறையாட்சியின் கருவிகளாக மாற்றி உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.