The Solemnity of the Body & Blood of Christ ( Corpus Christi )

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

2023.06.11

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நமக்கு ஆசி வழங்கி, நமக்கு நமக்கு உணவூட்டி, நமக்கு அமைதி தருகின்றவருமான நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தம் பெருவிழாத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

நாளாந்தம் இறைவன் நமக்குச் செய்துவரும் எல்லவிதமான இரக்கச் செயல்களையும் நினைவு கூர்ந்து, அவருக்கு ஏற்படையவர்களாய் வாழவும், நமக்கு விடுதலை தரும் இறைவனின் அருளன்பை மறவாதிருக்க வேண்டுமென்பதையும் இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. அத்தோடு நாம் கிறிஸ்துவின் திருவுடலாம் நற்கருணையை உண்ணும் போது மறுகிறிஸ்துவாக மாறி   ஒன்றிணைந்த சமூகமாக, அன்பியச் சமூகமாக வாழ அழைக்கப்படுகின்றோம் என்பதையும் பவுலடியார் எடுத்தியம்புகின்றார்.

 

இறைவார்த்தைகள் வழியாக நமக்குக் கிடைக்கும் செய்திகளை நாம் ஆழமாகத் தியானித்தவர்களாக, இறைவனின் அருட்கொடைகளுக்காக நன்றி கூறி, நமது வாழ்வால் கிறிஸ்துவை மற்றவர்களுக்குக் காட்டி, ஒன்றிணைந்த சமூகமாக, அன்பியச் சமூகமாக வாழ வல்லமையை இத்திருப்பலியில் கேட்டுச் செபிப்போம்

 

முதல் வாசகம்

 

நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

 

இணைச்சட்ட நூலிருந்து வாசகம் 8:2-3, 14-16

 

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.

 

அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால்,  மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

 

அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலை நிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்   திபா 147: 12-15, 19-20

 

பல்லவி : எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!

 

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.
பல்லவி

 

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
பல்லவி

 

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.

 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்   10:16-17

 

சகோதரர் சகோதரிகளே,

 

கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு

 

நற்செய்திக்கு முன் வசனம்   யோவா 6:51-58

 

அல்லேலூயா,  அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்,  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

 

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:51-58

 

அக்காலத்தில்

 

இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்”.

 

“நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.”

 

ஆண்டவரின் அருள்வாக்கு

 

மன்றாட்டுக்கள்

 

1. யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதி நெறிகளையும் அறிவிக்கும் தந்தையே இறைவா! மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடிக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், உம்மோடு இணைந்து தூய்மை, தியாகம், அன்பு, செபம் ஆகியவற்றில் வளர்ந்து, உமக்குரியவர் களாக வாழ அவர்களுக்கு வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. எம்மை நிறைவடையச் செய்யும் தந்தையே இறைவா! உமது மக்களாகிய நாங்கள் அனைவரும்,  நீர் தந்த அருட் கொடைகளுக்காக நன்றி கூறி, எமது வாழ்வால் கிறிஸ்துவை மற்றவர்களுக்குக் காட்டி, ஒன்றிணைந்த சமூகமாக, அன்பியச் சமூகமாக வாழ்ந்திட அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. அமைதி நிலவச் செய்யும் தந்தையே இறைவா! உலக நாடுகள் அனைத்திலும் வன்முறைகள் அழிந்து உண்மையான அமைதி நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. இறுகிய பாறையிலிருந்து நீரைப் புறப்படச் செய்தவரான தந்தையே! பகைமை, பொறாமை, சாதி, பழிவாங்குதல், சுயநலம் போன்ற தீமைகளால் இறுக்கமான மனத்தைக் கொண்டு பிரிந்து வாழும் அனைவரையும் ஆசீர்வதித்து, மனமாற்றம் பெற்றிடும் நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.