மூவொரு இறைவன் பெருவிழா
2023.06.04
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இரக்கமும் பரிவும் உள்ளவரும் பேரன்பு மிக்கவருமான நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்புமிக்கவர். நம்பிக்கைக்குரியவர். மோசே வழியாக இறைவன் தான் எப்படியான தந்தை என்பதை வெளிப்படுத்துவதை இன்றைய முதலாவது வாசகம் கூறுகின்றது. மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள் எனப் புனித பவுலடியார் அறிவுறுத்துவதை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
இந்த இறைவார்தைகள் வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படும் இறைவனின் விரு ப்பத்தை நாம் கண்டுணர்ந்து நிறைவேற்றவும், நாமனைவரும் மூவெரு கடவுளைப்போல ஒன்றிணைந்த வாழ்வு வாழவும் வல்லமையை இத்திருப்பலியில் கேட்டுச் செபிப்போம்
முதல் வாசகம்
இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.
விடுதலைப் பயண நூலிருந்து வாசகம் 34:4-6, 8-9
அந்நாள்களில்
ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்; இரக்கமும் பரிவும் உள்ள இறை வன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்” என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,
“என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல். தானி (இ). 1: 29-33
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது.
பல்லவி
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக.
பல்லவி
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக.
பல்லவி
இரண்டாம் வாசகம்
இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம் 13:11-13
சகோதரர் சகோதரிகளே,
இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திவெ 1:8
அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:16-18
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. தூய மாட்சி விளங்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், மூவொரு கடவுளின் ஒருமைப்பாட்டைத் தம்முள் கொண்டு, மேசேயைப் போல என்றும் உமது திருவுளத்திற்குப் பணிந்து, தம் வாழ் வாலும், பணியாலும் உமது மாட்சிமையைத் துலங்கச் செய்திட, அவர்களுக்கு வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எங்கள் மூதாதையரின் கடவுளாகிய தந்தையே இறைவா! உமது மக்களாகிய நாங்கள் அனைவரும், எங்கள் நடத்தை யைச் சீர்ப்படுத்தி, உமது அறிவுரைக்குச் செவிசாய்த்து, மன ஒற்றுமை கொண்டு அமைதியுடன் வாழ்ந்திட அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்புத் தந்தையே இறைவா! எம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை உருவாக்கி உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான தந்தையே! உலக நாடுகள் பலவற்றில், இன்று பெருகிவரும் உமது படைப்பின் ஒழுங்கிற்கு எதிரான செயற்பாடுகள் அழிந்து, உமது திட்டத்தைப் பக்குவமாகப் பேணிக் காக்கும் நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.