The Feast of Pentecost

தூய ஆவியார் பெருவிழா ஞாயிறு

2023.05.28

 

முன்னுரை1

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தூய ஆவியாரை நம்மேல் பொழிந்து,  நமக்கு அமைதியை அருளும் நம் இறைத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.  இன்று நாம் தூய ஆவியாரின் பெருவிழாத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். இத்தினத்தில் நாம் தூய ஆவியாரின் வரங்கள், கனிகள், கொடைகள் ஆகியவற்றைப் பெறவும்,  இறைவனுக்கு நன்றி செலுத்தவும் ஒன்று கூடியுள்ளோம்.

 

ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால், தூய ஆவியாரின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால்  நாம் வாழ்வோம். ஆண்டவரின் ஆவியார் உள்ள இடத்திலும்,  இதயத்திலும் விடுதலையும்,  மகிழ்ச்சியும் உண்டு. ஆண்டவரின் ஆவியாரை இதயத்தில் இருக்க வைத்து இயங்குபவர்களின் வாழ்வில் வல்லமை இருக்கும், அன்பு இருக்கும், அரும் பெரும் செயல்கள் நடைபெறும். ஏனெனில் தூய ஆவியார் நம்மையெல்லாம் நிறை உண்மையை நோக்கி வழிநடாத்துகின்றார் என்பவைகளே இன்று நம்மை வந்தடையும் இறைவனின் செய்தி          களாகும்.

 

ஆகவே நாம் அனைவரும் ஆவியாரின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடிப்போம். கிறிஸ்துவின் துன்பங்களில் நாமும் பங்கேற்போம். தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுப்போம். அவர் அருளும் புதியதும், புனிதமானது மான இயல்புகளை அணிந்து கொள்வோம். இறைவனின் சாட்சிகளாய் வாழ இத்திருப்பலி வழியாக நம்மை அர்ப்பணிப் போம்.

 

முதல் வாசகம்

 

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

 

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:1-11

 

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

 

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்   திபா 104:1, 24. 29-31, 34

 

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

 

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
பல்லவி

 

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
பல்லவி

 

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.

 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12:3-7, 12-13

 

சகோதரர் சகோதரிகளே,

 

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

 

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில்,  யூதரானாலும் கிரேக்கரானாலும்,  அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வசனம்

 

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்,  அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

தந்தை என்னை அனுப்பியது போல,  நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-23

 

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

 

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். நிறை உண்மையை நோக்கி வழிநடாத்தும் தூய ஆவியார் நிறைவல்லமையால் அவர்களை நிரப்பி,  அவர்கள் ஆன்மிக வல்லமையும்,  ஆற்றலும் மிக்கவர்களாயும்,  மக்களை நிறை உண்மையை நோக்கி வழி நடாத்துபவர்களாகவும் செயற்பட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. அனைத்தையும் எங்களுக்கு நினைவூட்டுகின்றவரான தூய ஆவியாராம் துணையாரை எங்களுக்குத் தரும் நல்ல தந்தையே! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நீர் கற்றுத் தரும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுத்து, அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொண்டு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ள ஆண்டவரே! ஆவியாரின் துணையால், எங்கள் உடலின் தீச்செயல்களைச் சாகடித்து  கிறிஸ்துவின் துன்பங்களில் நாமும் முழுமையாகப் பங்கேற்று நம்பிக்கை உறுதியோடு கிறிஸ்துவுக்கு சாட்சியம் பகர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. அன்புத் தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவு பட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும்  ஓர் உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.