26th Sunday of Ordinary Time

பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு

2022.09.25

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! ஒடுக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கி, பசித்திருப்போருக்கு உணவளித்து, சிறைப்பட்டோரை விடுவிக்கும் நம் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

கிறிஸ்தவர்களாகிய நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம், அழைக்கப்பட்ட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கங்களை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. அதாவது பொருள் ஆசையிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு  நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடுவதும்,  நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடுவதும் நிலைவாழ்வைப் பற்றிக்கொள்வதும்,  நமது கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கான வழிகளாகும்.

 

எனவே நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை அணிந்து கொண்டு நம்பிக்கையை உறுதியோடு வாழவும் இவ்வுலகில் இறைவனின் பணியாளர்கள் வழியாக நமக்குக் கொடுக்கப்படுகின்ற வழிமுறைகளுக்கு மதிப்பளித்து அதனை முழுமையாக வாழவும் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்

 

கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு!

 

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிருந்து வாசகம் 6: 1, 3-7

 

எல்லாம் வல்ல இறைவன் கூறுவது:

 

“சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கிடப்போருக்கும், கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப் போல புதிய இசைக் கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல்  திபா 146:7-10

 

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

 

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.
பல்லவி

 

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்.
பல்லவி

 

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார். சீயோனே! உன் கடவுள்,  என்றென்றும்,  எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார்.
பல்லவி

இரண்டாம் வாசகம்

 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.

 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6:11-16

 

கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.

 

அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  2கொரி 8:9

 

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா

 

நற்செய்தி வாசகம்

 

நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்.

 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:19-31

 

அக்காலத்தில்

 

இயேசு பரிசேயரிடம் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

 

அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.

 

அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்”.

 

அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார். அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு.  அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார்.

 

அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே,  இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார். ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால்,  இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. எல்லாத் தலைமுறைகளையும் ஆட்சி செய்யும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும்  பொருள் ஆசையிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு,  நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடுவதிலும் நம்பிக்கை வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடுவதிலும்,  நிலைவாழ்வைப் பற்றிக்கொள்வதிலும் அதிக அக்கறையுடையவர்களாய் வாழவேண்டிய வல்லமையை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2.பார்வையற்றோரின் கண்களைத் திறக்கும் தந்தையே! இறையரசின் உண்மைத்தன்மைகளை உணராத எங்களுடைய குருட்டுத்தனத்தை எம்மிடமிருந்து அகற்றி அணுக முடியாத ஒளியில் வாழும் உமக்கே என்றென்றும் மாண்பையும் மகிமையையும் எமது வாழ்வாலும், சிந்தனையாலும், செயலாலும் கொண்டுவருவதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கும் தந்தையே இறைவா! முதியோர் இல்லங்களில் வாழும் வயோதிபர், சவால்கயோடு வாழும் கைம்பெண்கள், காப்பகங்களில் வாழும் குழந்தைகள் ஆகியேருக்கு நீரே அனைத்துமாக இருந்து, அவர்களின் தேவைகளை நிறைவு செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. பசித்திருப்போருக்கு உணவளிக்கும் தந்தையே இறைவா! கவலை,  மனக்குழப்பம், கடன் தொல்லை, நோய் போன்றவற்றால் வேதனைப்படும் அனைவருக்கும் ஆறுதலைக் கொடுத்து, அவர்களின் சுமைகளை அகற்றி அவர்கள் நிம்மதியோடு வாழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.