பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு
2022.10.09
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது பேரன்பையும் உறுதிமொழியையும் என்றென்றும் நமக்கு வழங்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே; உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது; நாம் கிறிஸ்துவோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம் என்பதே இன்று நமக்கு வழங்கப்படும் இறைவனின் அருட்பொழிவுச் செய்திகளாகும்.
எனவே, இறைவனின் வார்த்தையை அதன் உண்மைப் பொருளுணர்ந்து விளங்கிக் கொள்ளவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறும் நல்லுள்ளம் நம்மிடம் உருவாகவும் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிருந்து வாசகம் 5:14-17
அந்நாட்களில்
நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப் போல் மாறினது.
பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்” என்றார்.
அதற்கு எலிசா, “நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக் கொள்ளேன்” என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்பொழுது நாமான் அவரை நோக்கி, “சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 98:1-4
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.
பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பல்லவி
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம் 2:8-13
அன்புக்குரியவரே,
தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.
பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: ‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது’. இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1தெச 5:18
அல்லேலூயா, அல்லேலூயா எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17:11-19
அக்காலத்தில்
இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. வியத்தகு செயல்கள் புரிந்துள்ள தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவார்கள் மீது அன்பும், பரிவும், பாசமும் கொண்டு பணியாற்றிடவும், நீர் வெளிப்படுத்திய திருவுளம் எதுவென கண்டுணர்ந்து செயற்பட வேண்டிய மனவுறுதியை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. பேரன்பையும் உறுதிமொழியையும் நினைவுகூரும் தந்தையே இறைவா! எந்நிலையிலும் மனந்தளராது எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறும் நல்லுள்ளம் எம்மிடம் உருவாகிடவும், நீர் வெளிப்படுத்திய திருவுளம் எதுவென கண்டுணர்ந்து செயற்படவும் வேண்டிய அருள் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அரசர்க்கொல்லாம் அரசராகிய இறைவா! உலகில் பல்வேறு நிலைகளிலும் பணியாற்றும் தலைவர்கள் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாது, உமது குரலுக்குச் செவிகொடுப்பதன் வழியாக உலகில் மக்கள் அனைவருக்கும் நலந்தரும் அமைதியை உருவாக்க உழைப்பதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நலந்தரும் மருத்துவரே இறைவா! இன்று மக்களைத் தாக்கி, அவர்களை அலைக்கழிக்கும் பல்வேறு நோய்த்தாக்கங்கள், உளவியல் உபாதைகள், மன அழுத்தங்களை அகற்றி அனைவரும் சுகநலனோடும் நிம்மதியோடும் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.