5th Sunday of Easter

பாஸ்காக் காலம் ஆறாம் ஞாயிறு

2023.05.14

 

முன்னுரை

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! துணையாளராம் தூய ஆவியாரை நம்மேல் பொழிந்து,  நமக்கு நிறைவளிக்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் பாஸ்காக் காலம் ஆறாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

 

இறைவார்த்தைக்கு கவனமுடன் செவிசாய்த்து வாழுகின்றவர்கள் பெற்றுக்கொள்ளும் அருள் ஆசீர்வாதங்களையும், குறிப்பாக ஆவியானவர் அவர்கள்மேல் நிறைவாகப் பொழியப்படுவதையும் இன்றைய இறைவார்த்தைகள் வழியாக நாம் அறிந்து கொள்ளுகின்றோம்.

 

எனவே நம் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுவோம். பணிவோடும் மரியாதையோடும் அனைவரோடும் உறவாடுவோம். இறைவார்த்தையின்படி வாழுவோம். அதற்கான வல்லமையை இத்திருப்பலியில் கேட்டுச் செபிப்போம்

 

முதல் வாசகம்

சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

 

திருத்தூதர் பணிகள் நூலிருந்து வாசகம்  8:5-8.14-17

 

அந்நாள்களில்

 

பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

 

சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்; ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்பட வில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல் திபா 66: 1- 7. 16,20

 

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

 

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள்.
பல்லவி

 

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை.
பல்லவி

 

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்!
பல்லவி

 

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!
பல்லவி

 

இரண்டாம் வாசகம்

 

மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

 

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:15-18

 

அன்பிற்குரியவர்களே,

 

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில்,  தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.

 

கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடு இருந்த அவர் இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர்பெற்றெழுந்தார்.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வசனம் யோவா 14:23

 

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

 

மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

 

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:15-21

 

அக்காலத்தில்

 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

 

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்”.

 

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

மன்றாட்டுக்கள்

 

1. பேரன்பை எம்மிடமிருந்து நீக்காத தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும், தம் உள்ளத்தில் கிறிஸ்துவை மனவுறுதியோடு ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றி தூய வாழ்வு வாழ்ந்திடவும்,  தாங்கள் எதிர்கொள்ளும் நம்பிக்கைக்கு எதிரான சவால்களுக்கு தகுந்த முறையிலும், பணிவோடும், மரியாதையோடும் விடை அளித்திட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

2. எம்  மன்றாட்டைப் புறக்கணியாத தந்தையே இறைவா! எம் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றவும், பணிவோடும் மரியாதையோடும் அனைவரோடும் உறவாடவும்,  இறைவார்த்தையின்படி வாழவும் அருள் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

3. கடலை உலர்ந்த தரையாக மாற்றிவிடும் தந்தையே இறைவா! ஆன்மிகம், அன்பு, அமைதி, உறவு என்பன  வற்றி பாலைவனமாகப் போயுள்ள மனித இதயங்களில் மனிதநேயப் பண்புகள் அனைத்தும் மீளவும் துளிர்த்து நல்லுறவின் சமூகம் உருவாகிட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

4. உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா! பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மன நலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.