பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு
2022.10.16
முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! கண்ணயராது, உறங்காது நம்மைக் காத்து வழிநடாத்தி வரும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும் என்னும் திருப்பாடல் செப வரிகள் இறைவனின் எல்லையில்லா அன்பையும், கருணையையும், அவரது வல்லமையையும் நமக்கு எடுத்துக் கூறி நமது இறை நம்பிக்கையை ஆழப்படுத்த நல்லதொரு வாய்ப்பைத் தருகின்றன. செபத்தின் பலன்களும், அதன் வல்லமையும் எத்தகையது என்பதையும் இறை வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன.
எனவே, நாமும் எப்பொழுதும் மனந்தளராமல் செபிக்கவும், உபவாசத்தோடும், ஒறுத்தல்களோடும் செபித்து இறையன்பைப் பெறவும் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்.
விடுதலைப் பயண நூலிருந்து வாசகம் 17:8-13
அந்நாள்களில்
அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றனர்.
மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும்வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 121:1-8
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி .
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.
பல்லவி
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதும் இல்லை; உறங்குவதும் இல்லை.
பல்லவி
ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.
பல்லவி
ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம்; திருமுகத்திலிருந்து வாசகம் 3:14-4:2
அன்புக்குரியவரே,
நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 4:12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18:1-18
அக்காலத்தில்
சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.”
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. கால் இடறாதபடி பார்த்துக் கொள்ளும் தந்தையே இறைவா! எம் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரையும் பாதுகாரும். தீமைகளும், உலகப் போக்கிலான சிந்தனைகளும், விருப்பங்களும் அவர்கள் பயணிக்கும் புனிதப் பதையிலிருந்து அவர்களை தடம் புரள வைக்காமல் அவர்களைப் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய தந்தையே இறைவா! எந்நிலையிலும் எப்பொழுதும் மனந்தளராமல் செபிக்கவும், உபவாசத்தோடும், ஒறுத்தல்களோடும் செபித்து இறையன்பைப் பெறவும், மனிதர்களை நம்புவதைவிட உம்மிடமே நம்பிக்கை கொண்டு வாழ வேண்டிய அருள் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமக்கு நிழல் ஆகும் தந்தையே இறைவா! ஆதரவின்றித் தவிக்கும் அனைவரையும் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். பெற்றோரை இழந்த பிள்ளைகள், துணையை இழந்த கணவன் – மனைவி, நாடிழந்த மக்கள், உரிமை இழந்த சமூகம் அத்தனை பேரையும் ஆசீர்வதித்து அவர்களுக்கு நீரே ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் வழிநடாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எல்லாத் தீமையினின்றும் பாதுகாக்கும் தந்தையே இறைவா! இன்று மக்களைத் தாக்கி, அவர்களை அலைக்கழிக்கும் மாற்றமுடியாது என்று கைவிடப்பட்ட நோயாளர்களை உமது இரக்கத்தால் குணப்படுத்தியருள வேண்டுமென்றும், மக்களை அச்சுறுத்தும், குணப்படுத்த முடியாத நோய்களையெல்லாம் உமது இரக்கத்தால் குணப்படுத்தி மக்களை நிம்மதியோடு வாழச் செய்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.