ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (13 ஏப்ரல் 2025 )

திருப்பலி முன்னுரை

இன்று ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளின் குருத்தோலை ஞாயிறாகும். பரிசுத்த வாரத்தினை இன்றே ஆரம்பிக்கின்றோம். அக்கால சூழ்நிலையில் மக்கள் “ஓசன்னா” பாடி வரவேற்க, ஆண்டவர் இயேசு கம்பீரமாய் கழுதையின் மீது அமர்ந்து எருசலேம் நகருக்குள் நுழைவதை  குருத்தோலைப் பவனிக்கு முன் வாசிக்கப்படும் லூக்கா நற்செய்தியில் வாசிக்க கேட்போம்.

முதல் வாசகத்தில் உடல், உள, ஆன்மா சார்ந்த துன்பங்களை எதிர்கொண்டு அவமானத்தின் உச்சத்தை அடையும் ஓர் இறை ஊழியனின் மனதில் தோன்றும் ஆலோசனைகளையும், இறைவனின் அன்பையும் எடுத்துரைக்கின்றது எசாயா நூல். இரண்டாம் வாசகத்தில் தாழ்ச்சியின் முழுமையான வெளிப்பாடு ஆண்டவர் இயேசு என்பதை பிலிப்பியர்களுக்கு புனித பவுல் வெளிப்படுத்துகின்றார். நற்செய்தியில் புனித லூக்கா ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளை எடுத்துரைக்கின்றார்.

இயேசுவின் ஓசன்னாப் பயணம் சாவை வெல்லும் மீட்சிப்பயணம் என்பதை உணர்ந்தவர்களாக அவர் எமக்காக பட்ட திருப்பாடுகளை நினைத்து முழுமையான ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்று, இப்புனித வாரத்தில் செப, தவ செயல்களில் ஈடுபடுவோம். தூய உள்ளத்துடன் தொடரும் தெய்வீகத் திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசகம்

நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7

நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.

நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 22: 7-8. 16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a)

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, ‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர். பல்லவி

16தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்.17a என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி

18என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.19நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

22உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.23ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

பிலி 2: 8-9

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 22: 14- 23: 56

 

நம்பிக்கையாளர் மன்றாட்டு

  1. அன்புத்தந்தையே இறைவா! எமது திரு அவையின் பணியாளர்களான திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர்கள் பொதுநிலையினர்கள் அனைவரையும் உம் பாதம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் தங்கள் பணி வாழ்வை திறம்பட நடத்த தேவையான தூய ஆவியை அவர்கள் மேல் பொழிந்து அவர்கள் உடல், உள சுகத்தோடு வாழ வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
  2. அன்புத்தந்தையே இறைவா! ஓசன்னா பாடி இயேசுவை மக்கள் வரவேற்றது போல் நாமும் இயேசுவை எம் உள்ளத்தில் வரவேற்று அவரை முன்மாதிரியாகக் வைத்து அன்பு, மன்னிப்பு, இரக்கம் ஆகிய பண்புகளை எம் வாழ்வில் கொண்டு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்பான ஆண்டவரே ! புனித வாரத்தைத் தொடங்கி இருக்கும் நாங்கள், இவ்வாரத்திலே இன்னும் அதிகமாய் உம் திருமகன் இயேசுவின் பாடுகளைத் தியானித்து உமதருளைப் பெற்று எங்கள் வாழ்வை மாற்றி அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கத்தின் ஊற்றாகிய இறைவா! நோயினால் துன்புறுவோர், தனிமையில் வாடுவோர், இன்னும் பல்வேறு தேவையில் இருப்போர் எல்லோரையும் உம்பாதம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் மேல் உமது கருணைக்கண்களைத் திருப்பி அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் தந்தையாக இருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.