ஆண்டவரின் திருப்பாடுகளின் வெள்ளி

ஆண்டவரின் திருப்பாடுகளின் வெள்ளி (18 ஏப்ரல் 2025)

முன்னுரை 

இன்று ஆண்டவரின் திருப்பாடுகளின் வெள்ளி எனும் புனித வெள்ளியாகும். இயேசு மனுக்குலத்தின் மீட்புக்காக, இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். இயேசுவின் இறப்பில்தான் நமக்கு சிறப்பான எதிர்காலம் பிறந்தது.

இன்றைய திருவழிபாடானது இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து என்ற மூன்று பகுதிகளைக் உள்ளடக்கியுள்ளது. கிறிஸ்து நமக்காக தம்மையே வெறுமையாக்கியதன் அடையாளமாக இன்று பலிப்பீடம் வெறுமையாகக் காட்சியளிக்கின்றது.

முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியனின் பாடுகளை எடுத்துரைக்கும் எசாயா இறைவாக்கினர் இயேசுவின் பாடுகளை முன்னறிவிக்கின்றார். இரண்டாம் வாசகத்தில் இயேசு அடிமை நிலைக்கு தம்மையே தாழ்த்தி வாழ்வு தந்தார் என்று பவுல் எபிரேயருக்கு கூறுகின்றார். நற்செய்தியில் இயேசுவுக்கு பிலாத்து வழங்கிய சிலுவை மரணத்தீர்ப்பு முதல் அவரது இறப்பு வரை பாடுகளை புனித லூக்கா எடுத்துரைக்கின்றார்.

கிறிஸ்துவின் தியாகத்தையும், சிந்திய இரத்தத்தையும் குறித்துக்காட்ட குருவானவர் சிவப்பு நிறத்திருவுடை அணிந்து வந்து பீடத்தின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடப்பார். நாமும் முழந்தாள் படியிட்டு நமது பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்போம்.

முதல் வாசகம்

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13- 53: 12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர். நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

இளந்தளிர்போலும் வறண்ட நில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்துகொள்வார்.

ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

பதிலுரைப் பாடல்

திபா 31: 1,5. 11-12. 14-15. 16,24 (பல்லவி: லூக் 23: 46)

பல்லவி: ‟தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.”

1ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். – பல்லவி
11என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.12இறந்தோர்போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். – பல்லவி
14ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.15என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். – பல்லவி
16உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.24ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். – பல்லவி
இரண்டாம் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16; 5: 7-9

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

பிலி 2: 8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள்

யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 18: 1- 19: 42