பாஸ்கா காலம் 4ஆம் ஞாயிறு

பாஸ்கா 4ஆம் ஞாயிறு(11 மே 2025)

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் 4ஆம் ஞாயிறாகிய இவ்வாரத்தை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தலுக்கான ஞாயிறாகவும் கொண்டாட திருஅவை நமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.  அன்பான வழிநடத்தல், அக்கறையுடன் கூடிய புரிதல், ஆபத்தில் துணிந்து காத்தல் என பன்முகத்தன்மையுடைய இறைவனில் எமது பாதுகாப்பை தேடி வாழுவோமேயானால் என்றும் மகிழ்ச்சியாக வாழ முடியும். 

முதல் வாசகத்தில் வேற்றினத்தாருக்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்ட பவுலும், பர்னபாவும் புகழ், பழி இரண்டையும் ஏற்றுக்கொண்டு நற்செய்தி பறைசாற்றும் பணியை முழுமனதோடு செய்வதையும், இரண்டாம் வாசகத்தில் விண்ணக அரியணைக்கும், ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்த மக்களைப் பற்றி திருத்தூதர் யோவானின் திருவெளிப்பாட்டு காட்சியையும், நற்செய்தியில் “நல்லாயன் நானே, ஆடுகளுக்கு நான் நிலைவாழ்வை அளிக்கின்றேன்”என்று இயேசு கூறுவதையும் வாசிக்க கேட்போம்.

மறைந்த திருத்தந்தை இந்நவீன உலகும், கடவுள் தந்த இயற்கை வளமும் இன்றைய இளையோர் கையில் உள்ளது என்றார். எம் பிள்ளைகள், இளையோர்கள் பாவங்களுக்கு முன்னோடி பொறாமை, சோம்பேறித்தனம் என்பதை உணர்ந்தவர்களாக இயேசுக்கிறிஸ்து கற்றுக்கொடுத்த தலைமைத்துவப்பண்புகளை தம்மகத்தே கொண்டு, இறைபராமரிப்பில் நல்லாயனாக வளர அருள்வேண்டி தொடரும் கல்வாரிப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 14, 43-52

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும் பர்னபாவையும் பின்தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.

அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.

 

இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு, இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)

பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!2ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! – பல்லவி

3ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! – பல்லவி

5ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். – பல்லவி

இரண்டாம் வாசகம்

அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 9, 14b-17

யோவான் நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

மூப்பர்களுள் ஒருவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்று கொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 27-30

அக்காலத்தில்

இயேசு கூறியது: “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.”

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்

  1. “அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கின்றார்”. இறைவா! தாய்த்திருச்சபையில் உமதழைப்பிற்கு செவிசாய்த்த திருப்பணியாளர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைபணியை சிறப்பாக செய்ய அவர்களுக்கு உமது வல்லமையை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. பாதுகாக்கும் இறைவா! இந்நவீன கால சமுதாயத்தில் மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு பணிசெய்து வரும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் அனைவரும் தங்கள் பணியில் மனநிறைவு காணவும், தமது இறையழைத்தலின் முழுப்பயனை அடையவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அழைப்பவரே இறைவா! எம் இளையோர்கள் சரியான புரிதலுடனும், தெரிதலுடனும் தம் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், திருச்சபைக்காக உழைக்கவும், இறையழைத்தல் எனும் ஒளியை அடைய இறைவார்த்தை வாசிப்பை அன்றாட பழக்கமாககொள்ளவும், தூய ஆவியார் துணையை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்றழைத்த இறைவா! திருமுழுக்கினால் பொதுக்குருத்துவத்தில் பணி செய்ய அழைக்கக்பட்டுள்ள நாம் கிறிஸ்தவ பகிர்வு வாழ்வினால் இயேசுவை அறிவிக்கவும், இறையரசின் வளர்ச்சிக்கு உழைக்கவும், எம்மிதயங்களில் பொதுநல எண்ணத்தை விதைத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.