பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு(06 ஜூலை 2025)

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக்காலத்தின் 14ஆம் வாரமாகும். கடவுளின் வார்த்தையையும், அவ்வார்த்தையை கொண்டுவரும் கடவுளின் பணியாளர்களையும் நல்மனத்தோடு நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அன்பு, அமைதி, இரக்கம், உண்மை, நீதி இவைகளைக்கொண்டு கிறிஸ்து கூறிய இறையரசை உருவாக்க அழைக்கப்படுகின்றோம்.

முதல் வாசகத்தில் “தாய் தன் பிள்ளையை தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன்” என்று ஆண்டவர் இஸ்ராயேலருக்கு அளிக்கும் தீர்ப்பு பற்றி எசாயா இறைவாக்கினர் அறிவிக்கின்றார். இரண்டாம் வாசகத்தில் “இயேசுவின் சிலுவையே அன்றி வேறெதிலும் பெருமை பாராட்ட மாட்டேன்” என்று சிலுவையின் மகத்துவத்தை அறிக்கையிடுகின்றார் புனித பவுல். லூக்கா நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை தமக்கு பின் நற்செய்திப்பணிக்கு ஆயத்தப்படுத்துகின்றார்.

திருமுழுக்கினால் பொதுக்குருத்துவத்தில் இணைந்துள்ள நாம் சொல்லாலும், செயலாலும் அமைதியை நிலைநாட்டி கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக வாழ வரம்கேட்டு தொடரும் திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம்

ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14c

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.

அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்.

நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

1அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!2அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3aகடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். – பல்லவி

4‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள்.5வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. – பல்லவி

6கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.7aஅவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! – பல்லவி

16கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.20என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! – பல்லவி

இரண்டாம் வாசகம்

என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18

சகோதரர் சகோதரிகளே,

நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.

இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!

இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 15a, 16a

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20

அக்காலத்தில்

இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது:

“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர்.

அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.

– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுக்கள்

  1. அமைதியின் ஊற்றே இறைவா எம் திருஅவைப்பணியாளர்கள் இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி கிறிஸ்து வழங்கும் அமைதியை, ஆறுதலை திருச்சபையின் மக்களுக்கு பெற்றுத்தரும் கருவிகளாக செயல்பட தேவையான ஆற்றலை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. வாழ்வின் ஊற்றே இறைவா! உலகெங்கும் தீமையின் ஆதிக்கத்தினால் போர் அச்சுறுத்தல் பெருகிவரும் சூழலில் மக்கள் அனைவரும் நீர் அளிக்கும் அமைதி நிறைந்த வாழ்வை வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. மகிழ்வின் ஊற்றே இறைவா! உம் அழைத்தலுக்கு கீழ்ப்படிந்து நற்செய்திப்பணிக்காக வெளிநாடுகளில் பணியாற்றும், குருக்கள் அருட்சகோதரிகள் அனைவரையும் உடல், உள, ஆன்ம நலத்தில் காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
  4. தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் நான் உன்னைத் தேற்றுவேன் என்ற இறைவா! தற்போது நிகழும் யுத்தத்தினால் வாழ்வில் துணையின்றி, ஆதவற்று, ஆறுதலின்றி தவிக்கும் உம் அன்புப்பிள்ளைகளின் மனத்துயரைப் போக்கி அவர்களுக்கு மறுவாழ்வளித்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.