திருவருகைக்காலம் முதல் ஞாயிறு(01 டிசம்பர் 2024)
திருப்பலி முன்னுரை
இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறாகும். கிறிஸ்து பிறப்பு விழாவை எதிர்நோக்கி, காத்திருக்கும் நாம் கிறிஸ்துவைச் சந்திக்க எதிர்நோக்குடன் காத்திருந்து அதற்காக நம்மை அன்பிலும், தூய்மையிலும் தயாரிப்போம்.
“தாவீதின் குலத்திலிருந்து உருவாகும் தளிர் மக்களுக்கு மீட்பைத் தரும்” என்று இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பை இறைவாக்கினர் எரேமியா எடுத்துரைப்பதை முதல் இறைவாக்கிலும், தூய பவுல் தெசலோனிக்கேயருக்கு எவ்வாறு கடவுளின் வருகைக்காக காத்திருக்க வேண்டுமென்று அறிவுரை கூறுவதை இரண்டாம் இறைவாக்கிலும், இயேசு தன்னுடைய இரண்டாம் வருகையால் உலகிலுள்ள எல்லாருக்கும் மீட்பு கிடைக்கும் என தம் சீடர்களுக்கு கூறுவதை லூக்கா நற்செய்தியிலும் வாசிக்க கேட்போம்.
மீட்பரின் வருகைக்காக காத்திருந்த நம் முதுபெரும் தந்தையர்களைப் போல நாமும் எதிர்நோக்குடன் காத்திருந்து, பாலன் இயேசுவின் வருகைக்காக அன்பிலும், தூய்மையிலும், எமது உள்ளங்களை தயாராக்குவதற்கு தொடரும் திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
முதல் வாசகம்
தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33: 14-16
இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்நாள்களில் — அக்காலத்தில் — நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5 ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; – பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். – பல்லவி
10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; – பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவின் வருகைக்கென்று ஆண்டவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12- 4: 2
சகோதரர் சகோதரிகளே,
உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!
சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.
– இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 85: 7
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36
அக்காலத்தில்
மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”
மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.
– இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
- திருஅவையின் அருள்நெறியாளர்கள் அனைவரும் இறைமக்களின் துயர் துடைக்கும் அன்புக் கரங்களாக உருவெடுத்து, முழுத்திருஅவையினரையும் உண்மையில் வழிநடத்த வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இவ்வாண்டில் பயணிக்கும் நாம் நற்செய்தி அறிவிப்பானது எமக்கு தரப்பட்டுள்ள அழைப்பும், கடமையும் என்பதை உணர்ந்து செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறைவா! பொய், களவு, பொறாமை, தன்னலம் என நாம் செய்த பாவங்களுக்காக எம்மை மன்னித்து, அமைதியின் பேரொளியை நாமும் கண்டு மகிழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்து, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு அல்லலுறும் மக்களின் வாழ்வு விரைவில் புதுப்பிக்கப்பட்டு பழைய வாழ்வை மீண்டும் தொடர இறைவா உம்மை மன்றாடுகின்றேம்.