ஆண்டவரின் தோற்றமாற்றம்
2023.08.06
முன்னுரை
அன்புடையீர், இன்று பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு. இயேசுவின் தோற்றமாற்ற விழாவில் கலந்து கொண்டு இயேசுவைப் போல் நாமும் மாட்சிமை மிகுந்த மாற்றம் அடைய விரும்பி இவ்வாலயத்திற்கு நல்வரவு தந்துள்ள அனைத்து இறைமக்களை அன்புடன் இனிதே வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தி நிகழ்வான இயேசுவின் தோற்றமாற்றத்தைப் பற்றி எல்லா நற்செய்தியாளர்களும், இயேசு எருசலேம் செல்லும் வழியில் இந்நிகழ்வு நடந்ததாக கூறியிருப்பது சற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். துன்பத்தின் முடிவில் இன்பம் உள்ளதைத் தோற்றமாற்ற நிகழ்வு நமக்கு வெளிப்படுத்துகின்றது. சிலுவையின்றி உயிர்ப்பு இல்லை. அதுபோல் துன்பமின்றி மகிழ்ச்சி இல்லை.
இயேசு எந்த அளவுக்கு இறைத்தன்மையோடு விளங்கினாரோ அதே அளவு மனிதத்தன்மையோடு விளங்கினார். நமக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் அவருக்கு இருந்தன. அவரும் தன் வாழ்வில் ஒரு சராசரி மனிதனாக இன்ப துன்பங்கள், வேதனை சோதனைகள், மனக்குழப்பம், விருப்பு வெறுப்புகள் என்று அனைத்தையும் எதிர்கொண்டார்.
இயேசு தந்தையோடு செப வாழ்வில் ஒன்றித்திருந்ததே அவரின் வெற்றிக்கு காரணம். எனவே நாமும் இத்தகையச் செப உறவில் தந்தையோடு நிலைத்திருந்து இயேசுவின் பாதையில் வழி நடந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.
இறைவாக்கினர் தானியேல் நூலிருந்து வாசகம் 7:9-10,13-14
நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதி மன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.
இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 97: 1-2. 5-6.9 (பல்லவி: 9a,1a)
பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்
பல்லவி
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. வானங்கள் அவரது நீதியை அறிவிக்கினறன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.
பல்லவி
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்தற்கும் மேலானவர் நீரே!
பல்லவி
இரண்டாம் வாசகம்
விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1:16-19
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்த போது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.
“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்த போது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.
எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத். 17:5c
அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17:1-9
அக்காலத்தில்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள் முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின.
இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் இவருக்குச் செவி சாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.
இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்த போது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
01. மகிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா!
கிறிஸ்துவும் தன் மனித வாழ்வில் எதிர்கொண்ட இன்பதுன்பங்கள், விருப்பு வெறுப்பு, வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் இறைவேண்டல் மூலம் எப்படி வென்றாரோ அதேபோல உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள் ஆகிய அனைவரும் உமது இறை ஆசியாலும் தமது இறைவேண்டுதலாலும் இயேசுவின் மாட்சிமையில் பங்கு கொள்ளத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
02. வல்லமை மிகுந்த இறைவா! உமது விருப்பத்தை நிறைவேற்ற தம்மையே எளிமையாக்கிக் கொண்ட இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நாங்களும் உமது விருப்பத்தை நிறைவேற்றவும், இறைத் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
03. இரக்கத்தின் தந்தையே இறைவா!
உலக நாடுகளின் தலைவர்களை ஆசீர்வதித்து, அவர்கள் மனித நேயம் கொண்டவர்களாகவும், மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும், அமைதிக்காக உழைப்பவர்களாகவும் இருந்து செயற்பட அவர்களை நெறிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
04. அன்புத் தந்தையே இறைவா!
உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள், நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.