பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு
2023.07.30
முன்னுரை
கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கித் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்யும் நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பதும், ஆண்டவருக்கு விருப்பமான முறையில் கேட்கப்படும் மன்றாட்டுக்களுக்கு ஆண்டவர் நிறைவாக அருள் நலன்களை வழங்குகின்றார் என்பதும், இறையரசிற்காக உலக செல்வங்களைத் துறக்கின்றபோது இறையருளை நிறைவாகப் பெறுகின்றோம் என்பதும் இன்று நமக்கு வழங்கப்படும் இறைவனின் செய்திகளாகும்.
எனவே நாமும், கடவுளை அன்பு செய்து, அவருடைய திட்டத்திற்கேற்ப வாழ்ந்து இறையரசின் மக்களாகத் திகழ இத்திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 5, 7-12
அந்நாள்களில்
கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்று கடவுள் கேட்டார்.
என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்களினத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.
சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை”.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா 119: 57,72,76-77,127-130
பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு. உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.
பல்லவி
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும். உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும். ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.
பல்லவி
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக்கொண்டேன். பொய்யான வழி
அனைத்தையும் வெறுக்கின்றேன்.
பல்லவி
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை. ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது. அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.
பல்லவி
இரண்டாம் வாசகம்
தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30
சகோதர சகோதரிகளே,
கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார். அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்.
தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார். தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார். தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11:25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52
அக்காலத்தில்
இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டுஇ மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர். கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர். பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்”.
இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள்.பின்பு அவர், ‘ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மன்றாட்டுக்கள்
1. உமது பணியாளர்கள்மீது அதிக அக்கறையுடையவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் உம்மை நிறைவாக அன்பு செய்யவும், உமது திட்டத்தினை நன்குணர்ந்து செயற்படவும், உமக்காக அனைத்தையும் துறந்து தியாக உள்ளத்தோடு பணிபுரியவும் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஞானத்தின் ஊற்றான தந்தையே இறைவா! இறைமக்கள் சமுதாயமாக இருக்கும் நாங்கள், உலகம் காட்டும் வழிகளைப் பின்பற்றாது, உமது வார்த்தை காட்டும் ஞானத்தின்படி வாழுவதற்கு வேண்டிய மனப் பக்குவத்தை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தையே இறைவா! உலக நாடுகளில் பெருகிவரும் வன்முறைகளும், உயிர்க் கொலைகளும் வேரறுக்கப்பட்டு, அமைதியும், மனித மாண்பும் நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இரக்கத்தின் தந்தையே இறைவா! உலக நாடுகளின் தலைவர்களை அசீர்வதித்து, அவர்கள் மனித நேயம் கொண்டவர்களாகவும், மக்களின் நலனில் அக்கறை கொண்டுவர்களாகவும், அமைதிக்காக உழைப்பவர்களாகவும் இருந்து செயற்பட அவர்களை நெறிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.