குடும்பங்களின் பாதுகாவலரும், தொழிலாளர்களின் பாதுகாவலருமான புனித சூசையப்பர் திருவிழாவானது 11.5.2025 ஞாயிற்றுக்கிழமை 15 மணியளவில் பேர்ண் வாபேர்ண் என்னும் இடத்திலுள்ள புனித மிக்கேல் ஆலயத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. திருச்செபமாலைத் தொடர்ந்து திருவிழாத் திருப்பலியை இந்தியா சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி. பிலிப் அடிகளார் பிரான்ஸ் நாட்டின் பெல்பேட் என்னும் இடத்தில் தனது பணி வாழ்வை முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப இருப்பதால் அவர் தலைமையில் திருப்பலி இடம் பெற்றது. அவரோடு இணைந்து இலங்கை திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.போல் றொபின்சன் அடிகளார், அருட்பணி. யூட்ஸ் முரளிதரன் அடிகளாரும் இணைந்து இத்திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியின் இறுதியில் அருட்பணி பிலிப் அடிகள் எமது பணியகத்துக்கு பல்வேறு ஆன்மீக உதவிகள் செய்து வந்தமையை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்துமுகமாக பொன்னாடை போர்த்தி கெளரவித்து, அன்பளிப்பும், ஒரு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
பின்னர் அன்று அன்னையர் தினமாக இருந்தபடியால் அன்னையர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு அவர்களின் பிள்ளைகளால் மலர்கள் கொடுத்து வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப பவனியானது ஆலயத்தினுள் நடைபெறும் போது செபங்களும் ஆர்ப்பரிப்புகளும் சொல்லப்பட்டன. இறுதியில் புனிதரின் ஆசீர் அருட்பணி. பிலிப் அடிகளால் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பேர்ண் பணியக மக்களோடு ஏனைய பணியக இறைமக்களும் இணைந்து புனிதரின் ஆசீரை குடும்பங்களாக பெற்றுக் கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் பணியக மக்களால் இரவுணவு வழங்கப்பட்டது. மக்கள் அனைவரும் மகிழ்வோடு இந்த திருவிழாவில் பங்கேற்று புனிதரின் ஆசீரைப் பெற்று பயன்பெற்றனர். இந்த திருவிழாவை நல்ல முறையில் கொண்டாட உதவிய பணியக அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களை வழிநடத்திய எமது இயக்குநர் அருட்பணி. முரளிதரன் அடிகளாருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் நன்றியும்.