எதிர்நோக்கின் திருப்பயணிகளின் திருப்பயணம்
  • Home
  • எதிர்நோக்கின் திருப்பயணிகளின் திருப்பயணம்

Save

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் வருடாந்த திருப்பயணமானது 21.04.2025- 25.04. 2025 வரை இடம்பெற்றது. இந்த திருப்பயணமானது 104 பேரைக் கொண்டதாக இடம்பெற்றது. இது திருப்பயணமாக மட்டுமல்லாது ஒரு மகிழ்வின் பயணமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. 21.04 .2025 திங்கட்கிழமை காலையில் முதல் குழுவானது அருட்பணி ரஜினிகாந்த் தலைமையில் ஏனைய திருப்பயணப் பொறுப்பாளர்களுடன் 52 பேர்களுடன் சூரிக் விமான நிலையத்தில் இருந்து லிஸ்பன் நோக்கி சென்றனர். அடுத்த குழுவானது எமது இயக்குநர் அருட்பணி யூட்ஸ் முரளிதரன் தலைமையில் 50 பேர்களுடன் விமானம் மூலம் லிஸ்பன் நோக்கி புறப்பட்டனர். இந்த திருப்பயணமானது விமானத்தில் செல்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் குழுவானது முதலில் புனித அந்தோனியார் பிறந்த, திருமுழுக்கு பெற்ற ஆலயங்களை தரிசித்ததுடன் அவர் பிறந்த ஆலயத்தில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். இந்த குழுவினருடன் கனடா நாட்டிலிருந்து வருகை தந்திருந்த அருட்பணி சனிஸ்ரன் அடிகளார், அருட்பணி ரஜினிகாந்த் அவர்களும் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியின் முடிவடைந்ததும் இவர்கள் ஏனைய இடங்களை பார்வையிட்டதுடன் மாலை பாத்திமா பதி நோக்கி புறப்பட்டு சென்றனர். இரண்டாவது குழுவினர் மாலை லிஸ்பனை வந்தடைந்து புனித அந்தோனியார் பிறந்த ஆலயத்தில் திருப்பலியை அருட்பணி வினோதன் தலைமையில் அருட்பணி டேமியன் அருட்பணி முரளிதரன் ஆகியோரும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். புனித அந்தோனியாரின் புனித பண்டத்தால் ஆசீர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அனைவரும் பக்தியுடன் ஆசீரைப் பெற்றுக் கொண்டு பின்னர் பாத்திமா நோக்கி பேருந்து மூலம் சென்றனர். இரவு உணவின் பின் அனைவரும் செபமாலை பவனியில் பங்கெடுத்தனர். இந்த செபமாலைத் தியானத்தில் ஐந்து அருள்நிறை மரியே என்ற செபம் தமிழில் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அடுத்த நாள் காலையில் 10:30 மணிக்கு அன்னை காட்சி கொடுத்த சிற்றாலயத்தில் அனைத்து அருட்பணியாளர்களும் இணைந்து அருட்பணி யூட்ஸ் முரளிதரன் தலைமையில் கூட்டு திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். மறையுரையை அருட்பணி சனிஸ்ரன் நிகழ்த்தினார். திருப்பலி முடிவடைந்ததும் அனைவரும் அன்னையின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். பிற்பகல் வான தூதர் லூசியா,யசிந்தா, பிரான்சிஸ் ஆகிய சிறுவர்களுக்கு காட்சி கொடுத்த இடங்களை பார்வையிட நடை பயணமாக தங்குமிடத்திலிருந்து செபமாலை சொல்லியபடி சென்று மன்றாடினர். அத்துடன் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் பார்வையிட்டனர். அதற்கு வழிகாட்டிகளாக இரண்டு அருள் சகோதரிகள் வந்து சிறந்த முறையில் ஆங்கிலத்தில் சொல்ல அதை நமது அருட்பணியாளர்கள் தமிழில் மிக விளக்கமாக மொழிபெயர்த்தனர்.
அதனால் அனைவரும் அவற்றை ஆர்வமாக கேட்டு அன்னையின் சிறப்பையும் அவளின் பரிந்துரைகளையும் இன்னும் அதிகமாக அறிந்து கொண்டனர். அன்றிரவு மீண்டும் செபமாலை பவனியில் அனைவரும் பக்தியாக பங்கேற்றனர். பவனியின் போது அன்னையின் திருவுருவை தாங்கிச் செல்ல சில ஆண்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு அன்னையின் பசிலிக்கா திருத்தலத்தில் கூட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த திருப்பலியை அருட்பணி டேமியன் தலைமை தாங்கினார். இந்த திருப்பலியில் இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு அருட்பணியாளர்களும் இணைந்து கொண்டனர். அருட்பணி சனிஸ்ரன் தனது எல்லா மறையுரையிலும் அன்னையின் பரிந்துரையையும் அன்பையும் சிறப்பாக எடுத்துரைத்ததுடன் விண்ணகத்தை அடைய என்ன வழிகள் என்பதை உறுதியாக தெரிவித்தும் இருந்தார். பின் காலை உணவின் பின் அல்கோவா அந்த இடத்தில் உள்ள மடாலயத்தையும் அங்குள்ள தேவாலயத்தின் அற்புதமான கட்டிடக்கலையை கண்டு ரசித்தபின் சாந்ரொம் என்ற இடத்தில் உள்ள நற்கருணை ஆண்டவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருப்பலியின் முடிவில் அற்புத தேவநற்கருணையும் சந்திக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அருட்பணி ரஜினிகாந்த் அவர்களின் திருப்பலியும் நற்கருணை வழிபாடும் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மதிய உணவு முடிவடைய நசரே என்னும் அழகிய மிகப் பெரியஅலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடற்கரையின் கண்டு இரசித்துப் பார்த்துடன் அங்குள்ள அன்னையின் ஆலயத்தை தரிசிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. மீண்டும் பத்திமாபதி வந்து இரவு 9:30 மணிக்கு செபமாலை பவனியில் பயபக்தியோடு இணைந்து கொண்டனர்.

நான்காம் நாள் காலை 6 மணிக்கு
பசிலிக்காவில் திருப்பலி ஒப்புக்கொடுத்தபின் காலை உணவின் பின் மீண்டும் நற்கருணை ஆண்டவர் ஆலயம் புனித கதவு ஆகியவற்றின் தரிசித்ததுடன் அன்னையிடம் இறுதி ஆசீர் வேண்டிய பின் பாத்திமா புனித தலத்தை விட்டு வெளியேறி பேருந்து மூலம் போர்த்துக்கல்லின் இரண்டாவது பெரிய நகரமான போர்த்து என்னும் இடத்தை வந்தடைந்து அங்குள்ள கட்டடக்கலைகள் ஆறுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டதுடன் மாலை கப்பல் மூலம் சென்று ஆற்றின் அழகினையும் கண்டு ரசித்தோம். அந்த இரவு மற்றும் ஒரு தங்குமிடத்தில் இரவினை கழித்து விட்டு அடுத்த நாள் இரண்டாவது குழு அதிகாலையில் சுவிஸ்சை நோக்கிய பயணமானது தொடங்கியது. அடுத்த குழுவினர் பிற்பகல் சுவிஸ் நாட்டை வந்தடைந்தனர். இந்தப் பயணமானது மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் இறைமக்கள் தமது இறைபக்தியை மீண்டும் புதுப்பிக்கக்கூடியதாகவும் இருந்ததாகவும் அன்னையின் அன்பை உணர்ந்தாகவும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்தனர்.
இந்த ஒவ்வொரு பயணத்திற்கும் சிறந்த வழிகாட்டிகளை ஒழுங்கு செய்திருந்ததுடன் அவற்றை அருட்பணியாளர்கள் தமிழ் மொழியில் சிறந்த முறையில் விளக்கம் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் திருப்பயணத்தை நல்ல முறையில் ஒழுங்கு செய்த இயக்குநர் அருட்பணி முரளிதரன் அவர்களுக்கும் திருப்பயண ஒழுங்கமைப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும். மற்றும் இந்த திருப்பயணத்திற்கு இயக்குநருக்கு உதவி செய்த கொழும்பு q West Destinations பொறுப்பாளர் திருமதி லலனி பெரேரா அவர்களுக்கும் நன்றிகள்.
இந்த திருப்பயணம் நல்ல முறையில் நடைபெற ஒத்துழைத்த அனைத்து திருப்பயணிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

இறுதியாக எப்போதும் அன்னையின் அன்பிலும் பக்தியிலும் அரவணைப்பிலும் நிலைத்திருப்போம்.

      

 

      

 

      

 

      

 

       

 

   

 

      

 

       

 

   

 

   

 

   

 

      

 

   

 

     

 

Share:

More Posts

பேர்ண் பணியக பாதுகாவலர் புனித சூசையப்பர் திருவிழா
புனித லூர்து அன்னை திருவிழா
புனித சூசையப்பர் திருவிழா